வேகமாக குறைந்து வரும் அணைகளின் நீர்மட்டம்

வனப்பகுதியில் மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

Update: 2023-08-21 11:51 GMT

தளி

வனப்பகுதியில் மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருமூர்த்தி அணை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

போதிய மழை இல்லை

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக அணைக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. நீர்வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. .மேலும் திருமூர்த்திஅணையின் பிரதான நீராதாரமான காண்டூர் கால்வாயில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பணியை பூர்த்தி செய்து பி.ஏ.பி.தொகுப்பு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று அமராவதி அணையில் தூர்வாரும் பணி தொடங்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 18.05 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 56.07 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 59 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்