தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. தற்போது இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 605 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் நீர்வரத்து குறைந்ததால் நேற்று அணையின் நீர்மட்டம் 141.65 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 454 கனஅடியாகவும் குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.