ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் எண்ணப்படுகிறது.

Update: 2022-07-10 18:47 GMT

வாக்கு எண்ணும் மையம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு பதவி, தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி, மேலப்பட்டு, நெடுங்குடி, வெட்டுக்காடு ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், செங்கீரை ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினருக்கும் நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 119 வாக்குச்சாவடிகளில் 37 ஆயிரத்து 926 வாக்குகள் பதிவாகி இருந்தது. மொத்தம் 69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு மற்றும் தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் அறையில் வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெடுங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செங்கீரை ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகளும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான ஓட்டுகளும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலப்பட்டு ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளது.

இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் மேஜைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பெட்டிகள் ஸ்ட்ராங் ரூம் என அழைக்கப்படும் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணி அளவில் முடிவுகள் வெளியாகி விடும்.

Tags:    

மேலும் செய்திகள்