காதலை ஏற்க மறுத்த பிளஸ்-1 மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து

காதலை ஏற்க மறுத்த பிளஸ்-1 மாணவி கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார்.

Update: 2022-05-31 20:46 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று பிளஸ்-1 தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது, அவர் திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அருகே சென்றபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அவர் காதலை ஏற்க மறுத்தார். ஆனாலும் தொடர்ந்து அந்த வாலிபர் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கத்திக்குத்து

பின்னர், அந்த வாலிபர் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக மாணவியை குத்தினார். இதில் கழுத்து உள்பட 10 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் சத்தமிட்டப்படி ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.

இதைகண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த மாணவியை மீட்ட அப்பகுதியினர் மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலத்த காயங்களுடன் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியை கடத்திய வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை கத்தியால் குத்தியது மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கேசவன் (வயது 22) என தெரியவந்தது.

மேலும், விசாரணையில் கேசவன் மீது கடந்த ஆண்டு அந்த மாணவியை கடத்தி சென்றது தொடர்பாக போக்சோவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய கேசவனை மணப்பாறை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்