போராட்டத்தை வாபஸ் பெற்ற கிராம மக்கள்
கடையம் அருகே போராட்டத்தை வாபஸ் பெற்ற கிராம மக்கள்
கடையம்:
கடையம் அருகே ஏ.பி.நாடானூரில் அந்த பகுதியை சேர்ந்த 9 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு அரசு கொடுக்கப்பட்ட நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை சிலர் போலி பட்டா, பத்திரம் அமைத்து கிரையம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் ஏற்கனவே போராட்டம் நடத்தி, விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த நிலத்தில் வேலி அமைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் அப்பகுதியிலுள்ள கோவிலில் கடந்த 27-ந் தேதி காலை முதல் இரவு பகலாக சமையல் செய்தும், பெண்கள் பீடி சுற்றியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து 3-வது நாளாக நேற்று அவர்கள் தங்கள் ஆதார், குடும்ப அட்டையை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், சுடுகாட்டில் குடியேற போவதாகவும் தெரிவித்தனர். மேலும் பா.ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமையில் பாஜக.வினர், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து வருவாய் துறையினர் முன்னிலையில் போடப்பட்ட வேலிகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.