தாழ்வாக சென்ற மின்கம்பியை சவுக்கு கம்பால் முட்டு கொடுத்த கிராம மக்கள்
ஆற்க்கவாடி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பியை சவுக்கு கம்பால் கிராம மக்கள் முட்டு கொடுத்துள்ளனர். விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்டது ஆற்க்கவாடி கிராமம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள கிழக்கு தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. கைக்கு எட்டும் தூரத்தில் செல்லும் மின்பிகளால் விபத்து நிகழ்ந்து மனித உயிர் பலி ஏற்படும் நிலை இருந்தது. அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.
இதனால் அச்சடைந்த அந்த கிராம மக்கள், சவுக்கு கம்புகளால் முட்டு கொடுத்து தூக்கி வைத்துள்ளனர். ஆனால் இந்த கம்புகளால் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால் ஒரு வித அச்சத்துடனேயே கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
நடவடிக்கை இல்லை
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், தற்போது மாலை மற்றும் இரவு நேரத்தில் காற்று அதிகமாக வீசுவதால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. மின்கம்பிகள் தாழ்வாக செல்வது குறித்து மின்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் கொடுத்து விட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. மாதந்தோறும் பராமரிப்பு என்ற பெயரில் மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். ஆனால் பராமரிப்பு பணி செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் எங்களது ஊரில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை இதுவரை இழுத்து கட்டவில்லை. எனவே தற்காலிகமாக சவுக்கு கம்புகளை கொண்டு முட்டு கொடுத்து தூக்கி வைத்துள்ளோம் என்றனர்.
விபத்து நிகழும் அபாயம்
இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அவ்வாறு மழைக்காலம் தொடங்கிவிட்டால் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதற்கு இந்த முட்டு கொடுத்துள்ள சவுக்கு கம்புகளால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே விபத்து நிகழும் முன் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மின்கம்பிகளை இழுத்து கட்ட நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.