சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
வி.கைகாட்டி அருகே சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுண்ணாம்புக்கல் சுரங்கம்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்துள்ள ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது.
இந்த சுரங்கத்திலிருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், சுண்ணாம்புக்கற்களை ஏற்றி அங்குள்ள கோவில் நிலத்தின் வழியே சென்று வருகிறது. இதனால், அக்கிராம மக்கள் கோவிலை புதிதாக கட்டித்தர வேண்டும் என சிமெண்டு ஆலை நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இதுவரை கோவில் கட்டித்தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
லாரிகள் சிறைபிடிப்பு
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று சாலையில் கற்களை போட்டு அவ்வழியே சென்ற சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்ற லாரிகளை சிறை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிமெண்டு ஆலை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், கோவில் கட்டுவதற்கான அனுமதி, செலவு அறிக்கை பெற்றுத்தந்தால் கோவிலை விரைவில் கட்டித்தருவதாக கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரிகளை கிராம மக்கள் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.