சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
பெண்ணாடம் அருகே சர்வீஸ் ரோடு அமைத்து தரக்கோரி சாலை பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்,
மேம்பாலம் கட்டும் பணி
பெண்ணாடம் அடுத்த சவுந்தரசோழபுரம்- அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இந்த தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இருமாவட்டங்களுக்கும் இடையே அடிக்கடி போக்குவரத்து தடைபட்டு வந்தது. எனவே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது மேம்பாலம் பணி முடிவடைந்த நிலையில், மேம்பாலத்துடன் சாலையை இணைக்கும் பணி மட்டும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
பணி தடுத்து நிறுத்தம்
இந்நிலையில் சவுந்திரசோழபுரம் பகுதியில் நேற்று காலை மேம்பாலத்துடன், சாலையை இணைக்கும் பணி பொக்லைன் எந்திரம் உதவியுடன் தொடங்கியது. இதுபற்றி அறிந்த செம்பேரி கிராம மக்கள் திரண்டு வந்து, இணைப்பு சாலை அருகில் சர்வீஸ் ரோடு அமைத்து தரக்கோரி பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்து வந்த பெண்ணாடம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.