வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. மாவட்டத்தில் 118 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. மாவட்டத்தில் 118 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது.
வேங்கிக்கால் ஏரி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் மழை வெள்ளம் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து அவ்வப்போது பெய்து வரும் மழையினால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி உபரிநீர் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. இந்த ஏரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏரியின் நீர் திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் வேங்கிக்கால் ஏரி முழு கொள்ளளவையும் எட்டி உபரிநீர் வெளியேறியது. இதனை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
100 சதவீதம் நிரம்பியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 118 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. 75-ல் இருந்து 100 சதவீதம் வரை 52 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 68 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 330 ஏரிகளும் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 103 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.
மீதமுள்ள 26 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படாமல் உள்ளது. கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் மழை பெய்தால் திருவண்ணாமலை மட்டுமின்றி மாவட்டத்தின் அநேக பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு ஏரிகளுக்கான நீர்வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை துரிதமாக தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.