மேம்பாலத்தில் இருந்து தலைகீழாக பாய்ந்த வேன்
அரக்கோணத்தில் மேம்பாலத்தில் இருந்து வேன் தலைகீழாக பாய்ந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் கிருபில்ஸ் பேட்டையை சேர்ந்த தயாளன் மகன் தினேஷ் குமார் (வயது 25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல ஆட்களை தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக கிருபில்ஸ் பேட்டையில் உள்ள தனது வீட்டின் அருகில் இருந்து அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திற்கு வேனை ஓட்டி சென்றார்.
அப்போது அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள ராம்கோ தொழிற்சாலை வளைவு பகுதி அருகே வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை இடித்து தள்ளிக் கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தலைகீழாக பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் வேனில் லேசான காயங்களுடன் இருந்த டிரைவர் தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.