பாதாள சாக்கடை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போர்க்கொடி

பாதாள சாக்கடை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போர்க்கொடி துக்கினாா்கள்.

Update: 2023-08-31 21:45 GMT

மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போர்க்கொடி எழுப்பினார்கள்.

மாநகராட்சி கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சுமார் 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் தங்கள் கருத்துகளை கூறினார்கள். வழக்கமாக குடிநீர் பிரச்சினை, சாக்கடை பிரச்சினை, சாலை பிரச்சினை குறித்து பலரும் கோரிக்கை வைத்து பேசினார்கள்.

பாதாள சாக்கடை

அப்போது கவுன்சிலர் ஒருவர் பாதாள சாக்கடை திட்டத்துக்கு வசூலிக்கப்படும் கட்டண தொகை அதிகமாக இருக்கிறது என்றும், பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கும், பாதாள சாக்கடை இணைப்பு தேவைப்படாத வணிக கட்டிடங்களுக்கும் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் புகார் தெரிவித்தார்.

அவரது புகாரை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை திட்டத்துக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

வரிச்சுமை

அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்த திட்டமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் வந்த பிறகுதான், மழை பெய்தால் சாலையில் அதிகமாக சாக்கடை வழிந்தோடுகிறது.

பல இடங்களில் சாலை உடைப்பு ஏற்பட பாதாள சாக்கடை திட்டம்தான் காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த திட்டம் மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றுகிறது.

போர்க்கொடி

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக மாநகராட்சி மூலம் அதிக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை இருந்தால் கவுன்சிலர்களாகிய நாங்கள் மக்களை சந்திக்கவே முடியாது. இது தோல்வி அடைந்த திட்டமாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள்.

இவ்வாறு கவுன்சிலர்கள் ஒரே குரலில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறுத்தி வைக்க போர்க்கொடி உயர்த்தினார்கள்.

இந்த கோரிக்கையை தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையிலான அ.தி.மு.க. கவுன்சிலர்களும் ஆதரித்து குரல் எழுப்பினார்கள்.

தவணை முறையில் செலுத்தலாம்

இதற்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் பேசினார். அவர் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை பராமரிக்க 27 வார்டுகளில் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. மற்ற 26 வார்டுகளில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் பராமரிப்பு பணியை வேண்டுகோளின் அடிப்படையில் செய்து வருகிறோம். 27 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வாகனங்கள் 8 மட்டுமே உள்ளன. இவை போதுமானதாக இல்லை. அதே நேரம் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வசூல் செய்யும் தொகை மூலம்தான் மாநகராட்சி நிர்வாகத்தை நடத்த முடிகிறது. அதிகாரிகளாகிய நாங்கள் மட்டுமல்ல, கவுன்சிலர்களாகிய நீங்களும் இந்த நிர்வாகத்தின் அங்கம்தான். எனவே பொதுமக்களிடம் நீங்கள்தான் எடுத்துக்கூற வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்துக்கான வைப்பு தொகை உள்ளிட்டவற்றை தவணை முறையில் கட்டும் வசதியும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்