பாதாளசாக்கடை கழிவுநீர் குழாய் உடைந்து சாலை உள்வாங்கியது

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பாதாளசாக்கடை கழிவுநீர் குழாய் உடைந்து சாலை உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-28 18:45 GMT


உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பாதாளசாக்கடை கழிவுநீர் குழாய் உடைந்து சாலை உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதாள சாக்கடை திட்டம்

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பாதாளசாக்கடை குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் 20 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் பாதாளசாக்கடை கழிவுநீர் பல்வேறு வீதிகளில் வழிந்தோடி சுகாராத சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கழிவுநீர், காவிரிஆறு, வாய்கால்கள், குளங்களில் கலப்பதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி குடிநீரிலும் இந்த கழிவுநீர் கலப்பதும் தொடர்கதையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான பல்வேறு வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தும் சரிசெய்யப்படவில்லை.

சாலை உள்வாங்கியது

இந்தநிலையில் நேற்று நகரின் பிரதான சாலையான கச்சேரி சாலையில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை உள்வாங்கி 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்படுகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றி தடுப்புகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்து வருகின்றனர். எனவே இந்த பிரச்சினையில் இருந்து நிரந்தர தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்