சுனாமி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது

தரங்கம்பாடி அருகே பெருமாள் பேட்டை மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-06 18:45 GMT

பொறையாறு

தரங்கம்பாடி அருகே பெருமாள் பேட்டை மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுனாமி குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை சுனாமி குடியிருப்பில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு மழை தீவிரமடைந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து சாலைகளில் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் ஒரு சில வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகளில் சூழ்ந்துள்ள மழை நீரால் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளதாகவும், பாம்பு போன்ற விஷ பூச்சிகள் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சரியான வடிகால் வசதி இல்லாததாலும், சாலை வசதி சரிவர செய்யப்படாததாலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே உடனடியாக தேங்கியிருக்கும் மழைநீர் வடிவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடிகால் வசதி

இதுகுறித்து மீனவர் பஞ்சாயத்தார் பாலு கூறியதாவது:-பெருமாள் பேட்டை கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் யாரும் மீன்பிடித் தொழிலுக்கு செல்லவில்லை. வீட்டில் மழை புகுந்ததால் பொதுமக்கள் மழை நீரை வெளியேற்றி கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒரு பக்கம் சாலையை உயர்த்தி ரோடு போட்டு விட்டார்கள், மறுபக்கம் ரோடு போடவில்லை, தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதை இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் ரோட்டை சரி செய்து கொடுக்க வேண்டும். வடிகால் வசதிகள் செய்து கொடுத்து வடி வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என்றார்.

திருக்கடையூர், ஆக்கூர்

திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளை பெருமாள்நல்லூர், கன்னங்குடி, கிள்ளியூர், நட்சத்திர மலை, காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம், வளையல் சோழகன், சீவகசிந்தாமணி, சரோஜராஜபுரம், அபிஷேக கட்டளை, பிச்ச கட்டளை, கிடங்கள், மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

கொள்ளிடம்

கொள்ளிடம் அருகே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கொள்ளிடம் பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வடிகால்வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது. ஆலங்காடு கிராமத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பு சம்பா இளம் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி ஒரு வார காலமாகியும் மழைநீர் வடியாததால் அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் அழுகிய நெற்பயிரை காண்பித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

திருவெண்காடு

சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. பூம்புகார் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், மீனவர்கள் நேற்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் பைபர் மற்றும் விசைப்படகுகள் பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மணி முதல் விட்டு, விட்டு லேசான மழை பெய்தது. மயிலாடுதுறை ெரயில்வே ஜங்ஷன் எதிரில் நேற்று மழை நீர் தேங்கி நின்றது. அதேபோல காமராஜர் சாலையிலும் மழை நீர் தேங்கியது இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 43 மில்லி மீட்டர் மழை பதிவானது.மழை அளவு வருமாறு:-

மணல்மேடு - 26, சீர்காழி-21, மயிலாடுதுறை-19, தரங்கம்பாடி-6.

Tags:    

மேலும் செய்திகள்