ஓட்டப்பிடாரம்:
திண்டுக்கல்லை சேர்ந்த டோமினி என்பவர் தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்திற்கு சென்று விட்டு தனது காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகில் சென்றபோது காருக்கு பின்னால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி ஒரு லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராவிதமாக கார் மீது மோதி அப்படியே சுங்கச்சாவடி முன்பு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த டோமினி மற்றும் அவர் நண்பர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்தவர்கள் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சுங்கச்சாவடியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.