லாரி மோதி கணவன்-மனைவி பலி

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கணவன்-மனைவி பலியாகினர். 3 மாத ஆண் குழந்தை படுகாயம் அடைந்தது.

Update: 2022-07-06 16:52 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கணவன்-மனைவி பலியாகினர். 3 மாத ஆண் குழந்தை படுகாயம் அடைந்தது.

லாரி மோதியது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஐகுந்தம் பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 27). இவர் சூளகிரி அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி செமிதா (21). இவர்களுக்கு 3 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அன்பு ஓசூர் பத்தலப்பள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அன்பு, தனது மனைவி மற்றும் 3 மாத ஆண் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் வளைவில் திரும்பிய போது பின்புறம் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

கணவன்-மனைவி பலி

இந்த விபத்தில் செமிதா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அன்பு மற்றும் குழந்தை படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு பரிதாபமாக இறந்தார். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து சென்று கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்