லாரி தீப்பிடித்து எரிந்து டிரைவர் சாவு

மின்சார ஒயரில் டிப்பர் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-23 16:20 GMT

இடிகரை

மின்சார ஒயரில் டிப்பர் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

லாரி டிரைவர்

கோவை- மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன்பாளை யத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக் கும் பணிகள் கடந்து சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தார் கலவை மற்றும் இதர பொருட்கள் காரமடையில் தயாரிக்கப்பட்டு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியில் கரூரை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் (வயது 32) என்பவர் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு லாரியை எடுத்துக்கொண்டு காரமடைக்கு சென்றார். அங்கு லாரியில் தார் கலவையை ஏற்றுக்கொண்டு 4 மணி அளவில் குமாரபுரம் பகுதியில் சாலை பணி நடக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மின்சார ஒயரில் உரசியது

இதைத்தொடர்ந்து ஆறுமுகம் லாரியின் பின்னால் இருந்த கலவையை சாலையில் கொட்டுவதற்காக தானியங்கி கருவியை இயக்கினார். உடனே தார் கலவையை கொட்டும் வகையில் லாரியின் பின்பகுதி டிப்பர் மேல்நோக்கி உயர்ந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதி டிப்பர் அங்கிருந்து மின்சார ஒயரில் உரசியது. இதனால் திடீரென்று மின்சாரம் தாக்கிய வேகத்தில் லாரியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீபரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

டிரைவர் சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ஆறுமுகம், மின்கம்பியில் உரசியை டிப்பரை கீழே இறக்குவதற்குரிய இரும்புக்கம்பியை (லிவர்) பிடித்து இழுக்க முயன்றார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. மேலும் தீப்பற்றி எரிந்ததில் அவர் வலிதாங்க முடியாமல் கூச்சல் போட்டார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடிய வில்லை. இதனால் ஆறுமுகம் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

விசாரணை

இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்