மரம் வேரோடு சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுந்தது
பேரணாம்பட்டு அருகே மரம் வேரோடு சாய்ந்ததில், மின் கம்பி அறுந்து விழுந்தது. வெள்ளம் காரணமாக பாலாற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பேரணாம்பட்டு அருகே மரம் வேரோடு சாய்ந்ததில், மின் கம்பி அறுந்து விழுந்தது. வெள்ளம் காரணமாக பாலாற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மரம் சாய்ந்தது
மாண்டஸ் புயல் காரணமாக பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் தொடர் மழை பெய்தது. சனிக்கிழமை காலை முதல் நேற்று காலை வரை சுமார் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த தொடர் மழையினால் பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தில் ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் பாலூர் கிராமத்திற்கு செல்லும் மின் பாதையிலிருந்து மின்சார கம்பி அறுந்து விழுந்தது.
இதன் காரணமாக பேரணாம்பட்டு - ஆம்பூர் நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு
பேரணாம்பட்டு தாலுகா அழிஞ்சிக்குப்பம் பாலாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன் தலைமையில், மேல்பட்டி வருவாய் ஆய்வாளர் கீதா, மேல்பட்டி போலீசார் பாலாற்றில் இரும்பு பேரி கார்டுகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அழிஞ்சிக்குப்பம் பாலாற்று வழியாக அழிஞ்சிக்குப்பம், ராஜக்கல், மேல்கொத்தகுப்பம், எம்.வி.குப்பம், மேல்பட்டி, கீழ்ப்பட்டி, வளத்தூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய ஊர்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, நரியம்பட்டு வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் சிரம்பப்பட்டு சென்று வருகின்றனர்.