அறநிலையத்துறை கடைகளின் வாடகையை சீரமைக்க வேண்டும்

அறநிலையத்துறை கடைகளின் வாடகையை சீரமைக்க வேண்டும் என வேலூர் வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-02 13:26 GMT

வேலூர்

வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம் வேலூரில் நடந்தது. மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். செயலாளர் ஏவி.எம்.குமார், பொருளாளர் அமீன்அகமது ஆழியார், இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கடந்த மே மாதம் திருச்சியில் நடந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு வணிகர் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், உள்ளாட்சி கடைகளின் வாடகை முன்னுக்கு பின்னாக உள்ளதை சீரமைக்க குழு அமைக்க வேண்டும். அறநிலையத்துறை கடைகளின் வாடகைகளை சீரமைக்க வேண்டும். தமிழக அரசு தற்போது சொத்து வரி உயர்வை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 சதவீதம் உயர்த்திக்கொள்ளவும், புதிய சொத்து வரியாக சதுரடிக்கு குறைந்த கட்டணம் வைத்து நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம். 10 ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது இனி வேண்டாம்.

வணிகர் நல வாரியத்தால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பெரும் வணிகர்கள், சிறு வணிகர்கள் என இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆவன செய்ய அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்