ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை தலையிடாது - அமைச்சர் சேகர் பாபு

ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை தலையிடாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-04 10:32 GMT


மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வருகை தந்தார். அப்போது அவருக்கு ஆதீனத்தின் சார்பில் பூரண கும்பமரியாதை அளித்து வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், ஆதீனத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தும், சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள வேத சிவகாமப் பாடசாலையில் படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சட்டசபையில் 1500 கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டிற்குள் 80 கோவில்களில் திருப்பணிகள் தொடங்கப்படும்.

தமிழ், சைவம் சார்ந்த ஆதீனங்களுக்கு உண்டான அனைத்துவிதமான சிறப்புகளையும் சேர்க்கும் அரசாக தமிழக அரசு இருக்கும். கோவில் இடங்களில் வசிருப்பவர்களை ஒரு கண்ணோட்டத்திலும், வணிகநோக்கில் இடத்தை பயன்படுத்துபவர்களை வேறொரு கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட்டு வருகிறது.

முறையான வாடகை செலுத்த முன்வந்தால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை அறநிலையத்துறை மேற்கொள்ளாது. கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வழங்க ஏற்கனவே 5 குழு இருந்தது. தற்போது 2 குழு அனுமதி இருந்தால் போதுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அனுமதி வழங்கும் கூட்டம் நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 300 கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடத்த அனுமதிவழங்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆதீனத்திற்கு உட்பட்ட 27 கோயில்களில் திமுக ஆட்சியில் 18 கோயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்திலுள்ள வெள்ளையங்கிரிநாதர், சதுரகிரி, பேரூர் நரசிம்மன்கோவில், பருவதமலை, கண்ணகிகோயில் ஆகிய 5 மலைகோவில்களை ஆய்வு செய்வதற்கு ஒரு ரூ. 1 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவில்களிலும் பழமை, தொன்மை மாறாமல் வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரையில் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் 2019-ம் ஆண்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்குப் பிறகு அனுமதிக்க மறுத்தார்கள். பொதுநலநோக்கோடு கனகராஜ் என்ற வக்கீல் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபபட்டதால் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென்று கோர்ட் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தி இருக்கிறது. தருமபுரம் ஆதீனம் நிர்வாகிக்கும் கோயில்களில் எந்த புகாரும், சர்ச்சையும் ஏற்படவில்லை. ஆனால் தில்லை நடராஜர் கோயிலை பொறுத்தவரையில் தீட்சதர்களுக்குள் இருக்கின்ற பிரச்னை, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிரச்னைகள் என்று பல புகார்கள் வந்துள்ளது.

புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்றுதான் அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். கோவிலை அறநிலையத்துறை ஏற்றுகொளும் என்று நாங்கள் கூறவில்லை. பொதுக்கோவில்களில் புகார்கள் வந்தால் அதனை விசாரிக்கும் உரிமை அறநிலையத்துறைக்கு இருக்கிறது. தீட்சதர்களுக்கு, தில்லை நடராஜர் கோயிலுக்கு எதிரான நடவடிககை இல்லை.

ஆய்வு செய்யும் உரிமை அறநிலையத்துறைக்கு இருப்பதால் கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்கள். எது நியாமமோ அதன்படிதான் இந்து சமய அறநிலையத்துறை செயல்படும். சிறந்த முறையில் நடைபெறும் நிர்வாகம், கோவில்களை அறநிலையத்துறை கையில் எடுக்க முயற்சிக்கக கூடாது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு புறம்பான செயல்கள், புகார்கள் இருந்தால்தான் அந்த கோவில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். அதேபோல ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை தலையிடாது. இறையன்பர்களின் மகிழ்ச்சிதான் அறநிலையத்துறையினர் மகிழ்ச்சி என்று செயல்பட்டுகொண்டு இருக்கிறோம். எல்லா கோவில்களிலும் கணக்குகள் பார்க்கப்படுகிறது. அறநிலையத்துறை துணை, இணை ஆணையர்கள் கணக்கு பார்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்