2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது
2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு ஏற்கனவே தினமும் காலை 6 மணிக்கும், மதியம் 2.40 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காலை 6 மணிக்கு புறப்பட்ட ரெயிலை மட்டும் இயக்க முதல்கட்டமாக தென்னக ரெயில்வே அனுமதியளித்து கடந்த 8 மாத காலமாக அந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.40 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் மயிலாடுதுறைக்கு புறப்படும் பயணிகள் ரெயிலுக்கு அனுமதி அளிக்கப்படாததால் அந்த ரெயில் சேவை மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.
ரெயில் சேவை தொடங்கியது
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான ரெயில் சேவையை மீண்டும் தொடங்க அனுமதியளித்த தென்னக ரெயில்வே நிர்வாகம், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் ரெயில் சேவை ஜூலை 10-ந் தேதி முதலும், மதியம் 2.40 மணிக்கு புறப்படும் ரெயில் சேவை ஜூலை 11-ந் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.
அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்ட ரெயில் சேர்ந்தனூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், புதுச்சத்திரம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் வழியாக மயிலாடுதுறையை இரவு 8.45 மணிக்கு சென்றடைந்தது.
பயணிகள் மகிழ்ச்சி
இதேபோல் மதியம் 2.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரெயில் மாலை 5.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது.இம்மார்க்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.