திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது

குமரியில் பரவலாக மழை பெய்ததால் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-03-19 18:45 GMT

நாகர்கோவில்:

குமரியில் பரவலாக மழை பெய்ததால் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.

இதே போல அடையாமடை, குழித்துறை மற்றும் குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. களியல், பாலமோர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து சற்று குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

அணைகள்

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பு மற்றும் களியல் ஆகிய பகுதிகளில் 36 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல பேச்சிப்பாறை-17.2, பெருஞ்சாணி-23, சிற்றார் 1-10.6, சிற்றார் 2-7.4, கன்னிமார்-4.6, பாலமோர்-12.4, அடையாமடை-5.2, முள்ளங்கினாவிளை-5.8, ஆனை கிடங்கு-1 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது. பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

திற்பரப்பு அருவி

மழை பெய்யாததாலும், வெயில் வாட்டி வதைத்ததாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிகவும் குறைந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி மிதமாக கொட்டுகிறது.

விடுமுறை நாளான நேற்று அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்