மயக்க ஊசி செலுத்தி புலி பிடிபட்டது

சுல்தான்பத்தேரி அருகே விவசாயியை அடித்துக்கொன்ற புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

பந்தலூர்,

சுல்தான்பத்தேரி அருகே விவசாயியை அடித்துக்கொன்ற புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

விவசாயி பலி

வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே மானந்தவாடி தாலுகா புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தாமஸ்(வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த 12-ந் தேதி காலை 10 மணிக்கு வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென தாமஸ் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத தாமஸ் தடுமாறி கிழே விழுந்தார். தொடர்ந்து புலி அவரது உடலில் பல இடங்களில் தாக்கி விட்டு ஓடியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார். உடனே சக விவசாயிகள், தொழிலாளர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த தாமசை மீட்டு மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே தாமஸ் உயிரிழந்தார்.

புலி பிடிபட்டது

இதையடுத்து வனத்துறையை கண்டித்து சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வனத்துறை வாகனத்தில் இரும்பு கூண்டு கொண்டு வந்து அப்பகுதியில் வைக்கப்பட்டது. மேலும் உடனடியாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

இதைதொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் ஒரு தோட்டத்தில் புலி பதுங்கி இருப்பதை வனத்துறையினர் கண்காணித்து உறுதி செய்தனர். தொடர்ந்து சிறிது தொலைவில் இருந்து வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் மயங்கிய புலியை பிடித்து கூண்டில் அடைத்தனர். 10 வயதான ஆண் புலி என்பது தெரியவந்தது. தொடர்ந்து கூண்டு லாரியில் ஏற்றப்பட்டு முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு புலி கொண்டு செல்லப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்