அட்டகாசம் செய்த புலி திடீர் சாவு

முதுமலையில் அட்டகாசம் செய்த புலி திடீரென உயிரிழந்தது. இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-16 18:45 GMT

கூடலூர்

முதுமலையில் அட்டகாசம் செய்த புலி திடீரென உயிரிழந்தது. இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டை கடித்துக்கொன்றது

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சியானது, புலிகள் காப்பக வனத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கு உட்பட்ட கல்லஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை புலி கடித்துக்கொன்று அட்டகாசம் செய்தது. இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஓடி வந்து புலியை விரட்டினர். அந்த புலி மிகவும் உடல் மெலிந்த நிலையில் காணப்படுவதாகவும், வேட்டையாட முடியாத நிலையில் இருந்ததால் ஆட்டை கடித்து கொன்றதாகவும் வனத்துறையினரிடம் விவசாயிகள் கூறினர். இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமையில் வனச்சரகர் மனோகரன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனால் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இறந்து கிடந்த புலி

இந்த நிலையில் கல்லஞ்சேரி கிராமத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வயல் பரப்பில் சுமார் 11 வயதான அந்த பெண் புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர் மனோகரன், கால்நடை டாக்டர்கள் ராஜேஷ் குமார், நந்தினி மற்றும் வனத்துறையினர் வரைந்து வந்து புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உடற்பாகங்களை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து புலியின் உடல் அப்பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வயது முதிர்வு காரணமாக அந்த புலி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரம் தெரிய வரும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்