டிராக்டர் விற்பனை நிறுவனத்தில் ரூ.32 ஆயிரம் திருட்டு

டிராக்டர் விற்பனை நிறுவனத்தில் ரூ.32 ஆயிரம் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-06 19:40 GMT

பெரம்பலூர் நான்கு ரோடு அரியலூர் சாலையில் டிராக்டர் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு நிறுவனம் பூட்டப்பட்டது. நேற்று காலை விற்பனை நிறுவனத்ைத சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் பார்த்த போது, நிறுவனத்தின் ஷட்டர் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து பணியாளர்கள் நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவரான பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில் வசித்து வரும் குபேந்திரன் (வயது 44) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.32 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதேபோல் அதனருகே உள்ள தர்மராஜ் (51) என்பவரின் கிரானைட்ஸ் கடையின் ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. ஆனால் கடையில் ஏதும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து குபேந்திரனும், தர்மராஜூம் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் முகமூடி அணிந்திருந்த ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சென்றது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்ம ஆசாமிைய வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்