தனியார் நிறுவனத்தில் ரூ.17 லட்சம் பொருட்கள் திருட்டு

கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.17 லட்சம் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-18 20:45 GMT

கோவை

கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.17 லட்சம் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த திருட்டு தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவனம்

கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்தவர் அருண்பாபு (வயது 39). இவர் கோவையை அடுத்த குறிச்சி சிட்கோ பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலைகளில் பெயிண்ட் உற்பத்தி செய்யும் பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்துக்கு தேவையான ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் அந்த பொருட்கள் 3 நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தது.

ரூ.17 லட்சம் பொருட்கள் திருட்டு

இதையடுத்த அந்த பொருட்களை லாரியில் இருந்து இறக்கி, நிறுவனத்தின் முன்பு வைத்து இருந்தனர். நேற்று காலையில் ஊழியர்கள் அங்கு வந்தபோது, அந்த நிறுவனத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த ரூ.17 லட்சம் பொருட்களை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து உரிமையாளர் அருண்பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் இது குறித்து போத்தனூரில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

அதன்பேரில் போலீசார் அந்த நிறுவனத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்ததுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ஏற்றுமதி நிறுவனத்தில் திருடப்பட்டது பெயிண்ட் ரோலர், வால்வு உள்ளிட்ட பொருட்கள் ஆகும். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்