மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1¾ லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்றார்.
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர், திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை எடுத்து ஒரு பையில் வைத்து கொண்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் பணப்பையை வைத்துவிட்டு அருகில் உள்ள பேக்கரிக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பாலச்சந்திரன் பேக்கரிக்குள் சென்ற நேரத்தில் பணப்பையை தூக்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பேக்கரிக்குள் சென்ற அவருக்கு பணப்பை ஞாபகம் வந்து அதனை எடுக்க வந்துள்ளார். பணப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.