வேளாண் அதிகாரி வீட்டில் பணம் திருட்டு

புதுக்கோட்டையில் வேளாண் அதிகாரி வீட்டில் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-02 18:49 GMT

வேளாண் அதிகாரி

புதுக்கோட்டை அசோக் நகர் அருகே உள்ள தமிழ்நகர் பகுதியை சோ்ந்தவர் கந்தசாமி (வயது 63). இவர் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி ஆவார். இவரது மகன் சென்னையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு குடும்பத்துடன் கந்தசாமி புறப்பட்டு சென்றார். இங்குள்ள வீடு பூட்டிக்கிடந்தது.

இந்த நிலையில் நேற்று காலை கந்தசாமியின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அங்கு பீரோக்கள் கதவு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த பொருட்கள், உடைமைகள் சிதறி கிடந்தன. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டிற்குள் புகுந்து தங்களது கைவரிசையை காட்டி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து கந்தசாமிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் வீட்டில் ரூ.25 ஆயிரம் வைத்திருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பணம் திருட்டு போயிருந்தது. நகைகள் திருட்டுபோனது பற்றி தெரிய வரவில்லை. இதைத்தொடர்ந்து அவரை புதுக்கோட்டைக்கு வந்து நகைகளை சரிபார்த்த பின் தகவல் அளிக்க போலீசார் கூறினர்.

இந்த திருட்டு குறித்து கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்