விவசாயி வீட்டில் 9¾ பவுன் நகைகள் திருட்டு

தேனி அருகே ஏலக்காய் விவசாயி வீட்டில் 9¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2023-08-01 21:00 GMT

தேனி அருகே ஏலக்காய் விவசாயி வீட்டில் 9¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஏலக்காய் விவசாயி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி மகாத்மா நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஓடைமேடு பகுதியில் உள்ள தோட்டத்தில் ஏலக்காய் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 27-ந்தேதி ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் உள்ள தனது ஏலக்காய் தோட்டத்துக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக ரமேசுக்கு, அக்கம்பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் கேரளாவில் இருந்து தனது வீட்டுக்கு விரைந்து வந்தார்.

நகைகள் திருட்டு

வீட்டை பார்வையிட்டபோது வீட்டுக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9¾ பவுன் நகைகள், 710 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தன. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்