வீட்டில் பெண் தூங்கிய அறையில் நகைகள் திருட்டு

வீட்டில் பெண் தூங்கிய அறையில் நகைகள் திருட்டுபோனது.

Update: 2023-01-03 19:36 GMT

மீன்சுருட்டி:

நகைகள் திருட்டு

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27), மகன் சுசீந்திரன்(5). பாண்டியன் தென்னாபிரிக்காவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சவுந்தர்யா மீன்சுட்டி பகுதியில் உள்ள ஒரு கணினி எடை மேடை நிலையத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பிய சவுந்தர்யா, இரவில் தனது மகன் சுசீந்திரனுடன் சாப்பிட்டுவிட்டு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அறையில் தூங்கியதாக தெரிகிறது. நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் மர்மநபர் புகுந்துள்ளார். அவர், சவுந்தர்யா தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் தோடு, அரை பவுன் மாட்டல், கால் பவுன் சிறிய தோடு மற்றும் கால் பவுன் தோடு ஆகிய நகைகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

நேற்று காலை எழுந்து பார்த்த சவுந்தர்யா பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை தேடி பார்த்தபோது, அவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சவுந்தர்யா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சுமணி வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்பநாய் டெய்சி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய மோப்ப நாய் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்