சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி வியாபாரி வீட்டில் 3 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை திருட்டு
சேலம் செவ்வாய்பேட்டை தொட்டுசந்திரையர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 53). வெள்ளி வியாபாரி. இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வரும் வழியில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை சேலம் திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாஸ்கரன் புகார் செய்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் திருடர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.