மூதாட்டி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

திண்டுக்கல் அருகே மூதாட்டி வீட்டில் 10 பவுன் நகை திருட்டுபோனது.

Update: 2023-07-17 20:00 GMT

வீட்டின் பூட்டு உடைப்பு

திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி ஜே.பி.நகரை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 62). இவரது கணவர் சுப்பிரமணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகம்மாள் தனது மகள் சாந்தி, பேத்தி தீபிகா ஆகியோருடன் வசித்து வந்தார். தீபிகா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இன்பர்மேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு முருகம்மாள், தனது வீட்டை பூட்டி விட்டு சாந்தியுடன் கோவையில் உள்ள தனது பேத்தி தீபிகாவை பார்க்க சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினர் ஒருவர் முருகம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் செல்போன் மூலம் முருகம்மாளுக்கு தகவல் கொடுத்தார்.

10 பவுன் திருட்டு

அதன்பேரில் அவர் கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு விரைந்து வந்து வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்ட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடுபோய் இருந்தது. இதையடுத்து அவர் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து ஜே.பி. நகர், விமல் நகர் வழியாக அங்கு உள்ள முட்புதரில் போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கண்காணிப்பு கேமராக்கள்

போலீசார் விசாரணை நடத்தியதில், ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை மர்மநபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.

துணிகர திருட்டு சம்பவம் குறித்து, திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்