கோவில் பூட்டை உடைத்து பணம், பூஜை பொருட்கள் திருட்டு
வாணியம்பாடி அருகே கோவில் பூட்டை உடைத்து பணம், பூஜை பொருட்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் பழமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பூசாரி பெருமாள் நேற்று மாலை பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
மீண்டும் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் இரும்பு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வந்து கோவிலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் பணம் மற்றும் பீரோவில் வைத்திருந்த வெள்ளி பூஜை பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து திம்மாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.