திருப்பணிக்கு நிதிபெற சென்னைக்கு புறப்பட்ட கோவில் நிர்வாகிகள்

திருப்பணிக்கு நிதிபெற கோவில் நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.

Update: 2023-01-05 18:45 GMT

விழுப்புரம்:

கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக நிதியுதவிக்கான வங்கி வரைவோலை தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த நிதிஉதவியை பெறுவதற்காக நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திலிருந்து கோவில் நிர்வாகிகளை பஸ் மூலம் சென்னைக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழியனுப்பி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

146 கோவில்கள்

விழுப்புரம் இணை மண்டலத்தில் 72 கிராமப்புற கோவில்களுக்கும், 74 ஆதிதிராவிடர் பகுதி கோவில்களிலும் திருப்பணி மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் நிதியுதவிக்கான வரைவோலை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட உள்ளது. இதனை பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகிகள் 5 அரசு பஸ்கள் மூலம் சென்னை வில்லிவாக்கம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள சிவசக்தி காலனி அகத்தீஸ்வர சாமி கோவிலுக்கு சொந்தமான திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பயனாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் விஜயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டிவனம்

இதேபோல் திண்டிவனம் மேம்பாலம் அருகில் இருந்து கோவில் நிர்வாகிகள் புறப்பட்ட பஸ்சை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், அவைத்தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு சுண்டல் விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவர்களிடம் அமைச்சர் செஞ்சிமஸ்தான் மொத்தமாக சுண்டலை வாங்கி, பயணிகளுக்கு கொடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்