கிராம உதவியாளர் பணிக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த வாலிபர்
கிராம உதவியாளர் பணிக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நரியாம்பட்டில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தவர் முனியப்பன். இவர் கடந்த 2003-ம் ஆண்டு இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து இவரது மகன் திருநாவுக்கரசு கருணை அடிப்படையில் தனக்கு கிராம உதவியாளர் வேலை வழங்கக்கோரி மனு செய்திருந்தார்.
இவரது மனுவை ஏற்றுக் கொண்ட வேலூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் இது குறித்து சான்றிதழ்கள் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருநாவுக்கரசு சமர்ப்பித்த மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, போலி சான்றிதழ் கொடுத்த திருநாவுக்கரசை தேடி வருகின்றனர்.