கூட்டாளிகளுடன் சேர்ந்து மாமனாரை கொன்ற வாலிபர்
மாமனாைர கூட்டாளிகளுடன் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாடிப்பட்டி
மாமனாைர கூட்டாளிகளுடன் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மாமனார்-மருமகன்
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தச்சம்பத்து சுந்தர்ராஜன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 52). டிரைவர். இவரது மகள் பிரபாவதி(25). இவர் அதே தெருவை சேர்ந்த பிரபு(28) என்பவரை காதலித்தார்.
இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதனால் அவர்களை எதிர்த்து 2016-ம் ஆண்டு பிரபாவதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது பரவையில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ரவிக்கும், அவருடைய மருமகன் பிரபுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் ரவி வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது பிரபு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ரவியின் தாயார் சிந்தாயி மீது மோதுவது போல வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவி, பிரபுவை கண்டித்ததால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர். அதன் பின் இரவு 9 மணிக்கு பிரபு தனது கூட்டாளிகளான சுப்பையா, முத்துப்பாண்டி, கருப்பையா ஆகியோருடன் வந்து ரவியின் வீட்டின் முன்பாக நின்று கொண்டு சத்தம் போட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து வெளியே வந்த ரவியின் தலையில் பிரபு உருட்டு கட்டையால் தாக்கினார். முத்துப்பாண்டி, கருப்பையா இருவரும் பாட்டிலை உடைத்து ரவியை குத்தினர். இதை தடுக்க முயன்ற சிந்தாயியை உருட்டு கட்டையால் தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே பிரபு மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனே ரவியை சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரபு, முத்துப்பாண்டி, சுப்பையா ஆகியோரை கைது செய்தனர். கருப்பையாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.