கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள என்.மேட்டுப்பட்டி கிராமத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோதிக்கொண்டனர். இதில் சதீஷ்குமார் (வயது25) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன், இந்திராகண்ணன், ஆசீர்வாதம் ஆகிய 3 பேரும் சதீஷ்குமாரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி, கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சதீஷ்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கண்ணன் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த சதீஷ்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.