சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த ஆசிரியர்கள் முடிவு
சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்து, அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் மயில் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் நடைமுறையில் உள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து திரும்பப்பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி சென்னையில் 10 ஆயிரம் ஆசிரியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.