உறைபனியால் தேயிலை செடிகள் கருகின

ஊட்டியில் கடும் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

Update: 2023-01-17 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் கடும் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

உறைபனி தாக்கம்

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டி, பைக்காரா, நடுவட்டம், எமரால்டு, குந்தா மற்றும் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. அதனை தொடர்ந்து மழை பெய்வது நின்று, பனிமூட்டம் நிலவி வந்தது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வந்தது.

இதனால் பச்சை தேயிலை மகசூல் குறைந்து வந்தது. இதையடுத்து மீண்டும் மழை பெய்து வந்ததால், பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் காணப்படவில்லை. இந்தநிலையில் கடந்த 2 வாரம் முழுவதும் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக ஊட்டி, பைக்காரா, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது.

அதிகாலையில் புல்வெளிகள் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. அப்பர்பவானி பகுதியில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகள் கருகி வருகின்றன. உறைபனி காரணமாக பிற வேளாண் பயிர்களும் கருக தொடங்கி உள்ளன. குந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான தேயிலை செடிகள் கருகி வருவதால், பசுமையை இழந்து வருகின்றன.

தேயிலை செடிகள் கருகின

பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கி உள்ள நிலையில், உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே, பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும் என்பதால், தேயிலைத்தூள் உற்பத்தி மற்றும் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்