டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

ஆற்காட்டில் ஆரணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-07-28 16:46 GMT

ஆற்காட்டில் ஆரணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உதயா (அ.தி.மு.க.) என்னுடைய வார்டில் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. ஏற்கனவே இது குறித்து தகவல் தெரிவித்து இருந்தேன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தலைவர்:- கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். தி.மு.க ஆட்சியில் புகார் தெரிவித்த 30 நாளில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

செல்வம்:- என்னுடைய வார்டில் தனியார் தொலைத்தொடர்பு துறைக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கினீர்கள். அவர்கள் பள்ளம் தோண்டுவதால் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் பிரச்சினை உள்ளது.

ஆணையாளர்:- உடனடியாக குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும்.

குப்பை வாருவதில்லை

ராஜசேகர்:- பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்ததை சீர் செய்யாமல் புதிதாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் தான் இருக்கும். கால்வாய் தூர்வாரும் பணிக்கு ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 10 அடி தூரம் கூட கால்வாய் தூர்வாரவில்லை.

பூவரசி:- 9-வது வார்டில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்தவில்லை. கால்வாய் தூர் வாருவதில்லை, குப்பைகள் வாருவதில்லை.

வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

கீதா:- பைப் லைன் உடைந்து உள்ளதை இதுவரை சீர் செய்யவில்லை. அதேபோல் கழிவு நீர் கால்வாயும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சீரமைக்க வேண்டும்.

அனு:- என்னுடைய வார்டில் குப்பை சேர்ந்துள்ளது. கழிவு பொருட்களும் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அதன் அருகே உள்ள பெரிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் போக்குவரத்து ஏற்படுகிறது. பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது. டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி சரியில்லை என்று குறை சொல்லாதீர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம், 70 அடி சாலை அமைத்தல் உள்ளிட்ட யாரும் செய்திடாத பல்வேறு பணிகளை செய்துள்ளோம்.

கண்மணி:- ராஜகோபால் தெருவில் கடந்த ஒரு மாதமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

தலைவர்:- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டில் உள்ள குறைகளை நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தெரியப்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் நகர மன்ற கூட்டத்தில் தான் தெரியப்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்