பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது

குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2022-06-08 17:14 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அரவிந்த் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி நேற்று கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

நோட்டு-புத்தகங்கள்

இதற்கிடையே பள்ளிகள் திறந்தவுடனேயே மாணவர்களுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பும் பணி நேற்று தொடங்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள நோட்டு மற்றும் புத்தகங்கள் தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டார் கவிமணி பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நோட்டு மற்றும் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அனைத்து மாணவர்களுக்குமான நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதிகாரி தகவல்

இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ெமாத்தம் 806 உள்ளன. இந்த பள்ளிகளுக்கு தற்போது ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 447 புத்தகங்களும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 608 நோட்டுகளும் வழங்கப்பட்டு உள்ளன" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்