கோத்தகிரி
கோத்தகிரி அருகே மசக்கல், தீனட்டி, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நீரோடை தூர்வாரப்படாமல் இருந்ததால், அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி தீனட்டி பகுதியை சேர்ந்த ஹாலம்மாள் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக கூக்கல் கிராம ஊராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் நீரோடையை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லும் ஓடைகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டு, நீரோட்டம் தடைபடாத வகையில் ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊராட்சி வழியாக செல்லும் பிரதான ஓடையை தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றனர்.