திருப்பத்தூர் பெரிய ஏரியை படகு மூலம் தூய்மை படுத்தும் பணி

திருப்பத்தூர் பெரிய ஏரியை படகு மூலம் தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.

Update: 2022-06-03 18:26 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பெரிய ஏரியை படகு மூலம் தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.

தூய்மை படுத்தும் பணி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்', தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி பெரியஏரியை படகு மூலம் தூய்மை படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள ஒரு ஏரி மற்றும் சாலை பகுதியை தேர்வு செய்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பத்தூர் நகராட்சி பெரியஏரியில் படகு மூலம் தூய்மை படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தூய நெஞ்சக்கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.

'என் குப்பை எனது பொறுப்பு' அடிப்படையில் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் சாலைகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள், வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பதோடு நீதிமன்றம் மூலம் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊக்கப்பரிசு

தினமும் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம்பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கும் பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் ஊக்கப்பரிசு வழங்கப்படும். திருப்பத்தூரை குப்பைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, திருமதி, துணைத் தலைவர் சபியுல்லா, நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்