டேங்கர் லாரி கவிழ்ந்ததால் 43 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆத்தூரில் புறவழிச்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 43 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-23 19:52 GMT

ஆத்தூர்

ஆத்தூரில் புறவழிச்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 43 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேங்கர் லாரி கவிழ்ந்தது

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சாம்பல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி கடந்த 21-ந் தேதி இரவில் அரியலூர் சிமெண்டு ஆலைக்கு புறப்பட்டு சென்றது. டேங்கர் லாரியை வாழப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.

ஆத்தூர் கோட்டை புறவழிச்சாலை அருகே இந்த லாரி இரவு 11 மணியளவில் வந்த போது பாலத்தின் அருகே எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதில் ரமேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதேநேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் புறவழிச்சாலை என்பதால் டேங்கர் லாரி கவிழ்ந்ததை அடுத்து, அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. இதனால் புறவழிச்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோடு எனப்படும் இணைப்பு சாலையின் மூலம் ஆத்தூர் நகர் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன.

மீட்பு பணி

இதனால் ஆத்தூர் நகரிலும், புறவழிச்சாலையையொட்டி உள்ள இணைப்பு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கவிழ்ந்த டேங்கர் லாரியை சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 கிரேன்கள் மூலம் மீட்கும் பணி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தொடங்கி நேற்று மாலை 6.30 மணி வரை தொடர்ந்தது.

24 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நீடித்த நிலையில், சுமார் 60 டன் எடையுள்ள டேங்கர் லாரியை கிரேன் லாரிகள் மூலம் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஒரு கிரேனின் ரோப் திடீரென துண்டாகியது. இதனால் மீட்புப்பணி தாமதம் ஆகி வந்தது.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு புறவழிச்சாலை வழியாக சென்று வந்த வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனிடையே நேற்று மாலை 6.30 மணியளவில் கிரேன்கள் மூலம் டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதன்பிறகு வழக்கம் போல் புறவழிச்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

டேங்கா் லாரி கவிழ்ந்ததால் இந்த சாலையில் சுமார் 43 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்