தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

கொப்பரை தேங்காய்க்கு உரியவிலை நிர்ணயம் செய்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-04 18:45 GMT

கொப்பரை தேங்காய்க்கு உரியவிலை நிர்ணயம் செய்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னை சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்ததாக தென்னை சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், முத்துப்பேட்டை, மன்னார்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலின் போது பெருமளவு தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது தென்னை மரத்தில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படுவதால் தேங்காய் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொப்பரை தோங்காய் கிலோ ரூ.108-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த தொகை மிக குறைவாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கொப்பரை தேங்காய்

தேங்காய் கொள்முதல் பொருத்தவரை பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வியாபாரிகளை ஊக்கப்படுத்தி சிண்டிகேட் அமைத்துள்ளதால் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க கேரள மாநிலத்தில் அரசே நேரடியாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதை போல் தமிழக அரசும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி தம்புசாமி கூறுகையில்,

கொப்பரை தேங்காய் கிலோ ரூ.108-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை போதுமானதாக இல்லை. எனவே கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140 என்ற விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

உரிய விலை கிடைக்கவில்லை

சத்துணவு மையங்கள், பள்ளி கல்லூரி மாணவ விடுதிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் உடல் நலத்துக்கும் நல்ல பலன் கொடுக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும். தென்னை வளர்ச்சி வாரியம் என்பது தற்போது கோவையில் இருந்து சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழையபடி தென்னை வளர்ச்சி வாரியம் கோவையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக கொப்பரை தேங்காயை தனியார் கொள்முதல் செய்து வருவதால் உரிய விலை கிடைக்காமல் உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் அரசே கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதை போல் தமிழக அரசும் நேரடியாக கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

அம்மையப்பன் பகுதியை சேர்ந்த தென்னை விவசாயி பாலு கூறுகையில்,

இந்த ஆண்டு இயற்கை போதிய ஒத்துழைப்பு அளித்ததால் தென்னை உற்பத்தி என்பது நன்றாகவே உள்ளது. ஆனால் பூச்சி தாக்குதல் காரணமாக தென்னை விவசாயிகள் சற்று பாதிப்பினை அடைந்தனர். நெல்லுக்கு ஆண்டு ஒரு முறை கொள்முதல் விலை என்பது உயர்த்தப்படுகிறது.

அதுபோல கொப்பரை தேங்காய்க்கு கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்வதில்லை. பல ஆண்டுகளாக விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது. ஆனால் தேங்காய் உற்பத்திக்கான செலவு அதிகரித்து வருகிறது. எனவே கொப்பரை தேங்காய்க்கு அரசே விலையை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பெரிதும் பலன் அளிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்