'நீட்' தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு கேட்ட 6 கேள்விகளுக்கு, தமிழக அரசின் பதில் தயார்

‘நீட்' தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு கேட்டு இருந்த 6 கேள்விகளுக்கு, தமிழக அரசின் பதில் தயாராக உள்ளதாகவும், அது ஓரிரு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-07-22 23:11 GMT

சென்னை,

தமிழக அரசு 'நீட்' தேர்வு விலக்கு மசோதா அனுப்பியது தொடர்பாக சுகாதாரம்-மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் கேட்ட 6 கேள்விகளுக்கு, தமிழக அரசின் சட்டத்துறை பதிலை தயாரித்து இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சகங்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அளித்துள்ள பதில்களை விரிவாக எடுத்துக்கூறினார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? தேசிய மருத்துவ ஆணையச்சட்டம், இந்திய மருத்துவ முறை தேசிய ஆணையச்சட்டம் மற்றும் ஓமியோபதி தேசிய ஆணையச்சட்டம் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்புகள் குறித்த ஷரத்துகள் ஏற்கனவே உள்ளது. எனவே மசோதா மாநில சட்டமன்ற அதிகார வரம்புக்கு மீறியதாக உள்ளதா?

பதில்:- மருத்துவ கல்வியை உள்ளடக்கிய 7-வது அட்டவணையின் பட்டியல் 3-ல் பதிவு 25-ன்படி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பான சட்டங்களை உருவாக்கும், சட்டம் இயற்றும் தகுதி மாநில சட்டமன்றத்துக்கு உள்ளதென்பதால், மேற்கூறிய ஆட்சேபனை அடிப்படையற்றது. மாநில சட்டமன்றத்துக்கு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்த சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட்டு 'தமிழ்நாடு மெடிக்கல் ஆபிசர் அசோசியேஷன்ஸ் யூனியன் ஆப் இந்தியா அதர்ஸ்-2021' என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது. கல்வியின் தரம், ஒருங்கிணைப்பு ஆகியவை மாநிலத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக விளக்கியுள்ளது. 'பிரீத்தி ஸ்ரீவத்சவா அன்ட் அதர்ஸ், ஸ்டேட் ஆப் மத்திய பிரதேசம் அதர்ஸ்-1999-ம் ஆண்டு' சுப்ரீம் கோர்ட்டு ஆணையில் மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்தும் விளக்கம் அளித்துள்ளது.

ஏற்புடையது அல்ல

கேள்வி:- மசோதா மாநில சட்டமன்றத்தின் தகுதிக்கு அப்பாற்பட்டது...

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு, 'தமிழ்நாடு மெடிக்கல் ஆபிசர் அசோசியேஷன்ஸ், யூனியன் ஆப் இந்தியா அதர்ஸ்-2021' ஆணையின்படி பட்டியல்-3, பதிவு 25-ன்கீழ் மத்திய அரசின் சட்டங்கள் மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களின் சேர்க்கை முறையை கட்டுப்படுத்த முடியாது என்பதும், இந்த இனங்களில் மாநில அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரமுள்ளது என்பதும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு 'ஹிஸ்ட் பார்மட்டிகல் லிமிடெட், ஸ்டேட் ஆப் பீகார்-1983-ம் ஆண்டு' ஆணையில் ஒரு சட்டம் மாநில மற்றும் மத்திய சட்டங்களுக்கு இடையே முரண்பாடு இருக்கும்பட்சத்தில் அந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி, ஒப்புதல்பெறும் பட்சத்தில் இந்த முரண்பாடு களையப்படும் என்று தெளிவாக கூறியுள்ளது. எனவே மாநிலங்களின் சட்டமன்றத்துக்கு இந்த மசோதாவை நிறைவேற்ற அதிகாரமில்லை என்பது முற்றிலும் தவறான வாதமாகும்.

கேள்வி:- 'நீட்' தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு என்றும், வரலாற்று சீர்திருத்தங்களை உள்ளடக்கியது என்றும் தரமான கல்வி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றால் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துகிறது என்றும், மாணவர்களுக்கு ஒரே தேர்வு எழுதுவதன் மூலம் பல்வேறு தேர்வுகளில் இருந்து மாணவர்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது...

பதில்:- இது முற்றிலும் ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, 'நீட்' தேர்வு முறையே இல்லாமல், மாணவர்களின் 12-ம் வகுப்பு தேர்வினை அடிப்படையாகக்கொண்டு இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கையை தகுதித்தேர்வு, அதாவது தமிழ்நாடு மேல்நிலை தேர்வு குழுமத்தினால் மேல்நிலை அளவில், சி.பி.எஸ்.இ. அல்லது பிற மாநிலத்தின் குழுமம் அல்லது பிற அதிகார அமைப்பினாலும் நடத்தப்படும் இணையான தேர்வு அடிப்படையில், இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கையை உறுதிப்படுத்துகிறது. மேலும் நெறிப்படுத்துதல் முறையை மேற்கொண்டு, சமநிலைப்படுத்த உரிய வழிமுறைகளையும் தெளிவாக விளக்குகிறது. இந்த மசோதா இளநிலை மருத்துவப்படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் சேர்க்கையை முன்வைத்துள்ளது. இது மாணவர்கள் பல்வேறு தேர்வுகள் எழுதுவதை முற்றிலும் குறைத்து, அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, மனஅழுத்தத்திலிருந்து விடுபட ஏதுவாக அமைகிறது. எனவே 'நீட்' தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது.

எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது

கேள்வி:-இந்த 'நீட்' மசோதா தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்துமா?

பதில்:- 'நீட்' மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத வாதமாகும். இந்த மசோதா குறிப்பிடப்பட்டுள்ள இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைமுறை நாட்டின் இறையாண்மைக்கோ, ஒற்றுமைக்கோ, ஒருமைப்பாட்டுக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கேள்வி:- இந்த மசோதா வேறொரு மாணவர் சேர்க்கை முறையை பின்பற்றுவதால், அரசமைப்பு சட்டம் பிரிவு 14-ஐ மீறுவது ஆகாதா?

பதில்:- இந்த மசோதா அரசமைப்பு சட்டம் பிரிவு 14-ஐ மீறுவது என்ற ஆட்சேபனையை ஏற்கமுடியாது. மசோதாவில் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்களில் அடிப்படையிலான சேர்க்கைமுறை வேறு எந்த சேர்க்கைமுறையை விடவும் நியாயம், சமத்துவத்தை ஏற்படுத்துகிறது. எனவே அரசமைப்பு சட்டத்தை மீறுகிறது என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது.

ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவேண்டும்

கேள்வி:- இந்த மசோதா தேசியக்கல்விக்கொள்கைக்கு முரணானதாக அமைந்துள்ளதா?

பதில்:- இந்த மசோதா தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மீறியுள்ளது என்று மத்திய அமைச்சகங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள வாதம் முற்றிலும் ஏற்கமுடியாது. தேசிய கல்விக்கொள்கை நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாக உள்ளது. கூட்டாட்சி தத்துவம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 'எஸ்.ஆர்.பொம்மை, யூனியன் ஆப் இந்தியா 1994' வழக்கின் தீர்ப்பின்படி, கூட்டாட்சி தத்துவம், நாட்டின் பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியன அரசமைப்பின் அடிப்படை கூறுகளாக விளங்குகின்றன என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மாநில சட்டமன்றத்துக்கு வழிகாட்டும் காரணியாக இருக்கமுடியாது என்பதால், மாநில சட்டமன்றங்களுக்கு உயர்கல்வி குறித்து சட்டம் இயற்ற முழுஅதிகாரம் உள்ளது. மேலும் 'மாடர்ன் டெண்டல் காலேஜ் அன்ட் ரிசர்ஜ், ஸ்டேட் ஆப் மத்திய பிரதேசம் 2016-ம் ஆண்டு' வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அமர்வு பத்தி 149-ல், இதுகுறித்து தெளிவான கருத்தை தெரிவித்துள்ளது. எனவே இந்த சட்டமசோதா கிராமப்புற ஏழை-எளிய மாணவர்களுக்கு சமமான, நியாயமான வாய்ப்புகளை வழங்குகிறது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் தரமான கல்வியையும், சமவாய்ப்பையும் வழங்கிட ஏதுவாக அமையும். எனவே மத்திய அரசு இந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்த பதில்கள் ஓரிரு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'நீட்' விலக்கு மசோதாவில் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

'நீட்' தேர்வு விலக்கு மசோதா குறித்து மத்திய அரசு கேட்டு இருந்த கேள்விகளுக்கு, பதில் அளித்துள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் 6 வகையான கேள்விகளுக்கான பதில்களை தமிழக அரசின் சட்டத்துறை மிகத் தெளிவான பல்வேறு விளக்கங்களுடன் கூடிய சட்டரீதியான பதில்களை தயாரித்துள்ளது. இது ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. அரசின் சார்பில் இதேபோல் கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு முடியாது என்று பதில் அனுப்பியது. ஆனால் இப்போது கருத்துகள், விளக்கங்களை கேட்டு இருக்கிறது. விளக்கங்கள் கேட்டு இருப்பது என்பதே ஒரு படி நாம் முன்னேறி இருக்கிறோம் என்று அர்த்தம். விளக்கங்களுக்கு சரியான பதில் சொல்லப்பட்டுள்ளது. ஏற்புடைய பதிலாக இருக்கின்ற காரணத்தினால் ஏற்றுக்கொண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

புதிய ஜனாதிபதி அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர். 'நீட்' தேர்வு விலக்கு கிடைக்கும் என்றே நாம் நம்புவோம். இந்த விஷயத்தில் வேகமான செயல்பாட்டை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் ஒவ்வொரு காயாக நகர்த்தி கொண்டு இருக்கிறார். நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்