தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் மயில், மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை தெரு நாய்கள் கடிப்பதால் அவை உயிரிழக்கிறது.
அதனால் விவசாய பயிர்களை பாதுகாத்திடவும், காட்டு விலங்குகளை பாதுகாத்திடவும், கசம் குட்டையில் இருந்து கண்ணப்ப நாயனார் கோவில் வரை காட்டை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்கொண்டனர். வேலி அமைத்து தர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக அவர்கள் அங்கேயே சாப்பாடு கொண்டு வந்து மதியம் மற்றும் இரவு உணவை சாப்பிட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.