வாலிநோக்கம் கடல் பகுதியில் இரை தேட குவிந்த பறவைகள்
நீர்நிலைகள் வறண்ட நிலையில் வாலிநோக்கம் கடல் பகுதியில் பறவைகள் இரைதேட குவிந்துள்ளன.
சாயல்குடி,
நீர்நிலைகள் வறண்ட நிலையில் வாலிநோக்கம் கடல் பகுதியில் பறவைகள் இரைதேட குவிந்துள்ளன.
வறண்ட நீர்நிலைகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் நவம்பர் மாதத்தில் இருந்து ஏராளமான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தில் உள்ள மரக் கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்து வரும். கோடை கால சீசன் தொடங்கிய பின்னர் மார்ச் மாதத்தில் அனைத்து பறவைகளும் திரும்பி சென்று விடும். கடந்த ஆண்டு பருவமழை மாவட்டத்தில் போதிய அளவு பெய்யாததால் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய் மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயின.
பறவைகள் குவிந்தன
இதன் காரணமாக ஏராளமான பறவைகள் நீர்நிலைகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன. இதனிடையே சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் உப்பங்களியம் கடல் பகுதியில் இரை தேடுவதற்காக மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, நத்தை கொத்திநாரை, வெள்ளை நிற கொக்குகள், நீர்க்காகவும் உள்ளான் குருவி உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த பகுதியில் குவிந்துள்ளன.
உப்பங்களியம் கடல் பகுதியில் நீந்தி செல்லும் சிறிய வகை மீன்களையும், சிப்பி, சங்கு போன்ற உயிரினங்களையும் நாரைகள் ருசித்து சாப்பிடுகின்றன. இதே வாலிநோக்கம் கடல் பகுதியில் தான் பருவமழை சீசனில் ஆஸ்திரேலியா பிளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.