கத்திரி வெயிலின் தாக்கத்தை விரட்டியடித்த கோடை மழை

திருச்சி மாநகரில் கத்திரி வெயிலின் தாக்கத்தை கோடை மழை விரட்டியடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-05-06 19:04 GMT

திருச்சி மாநகரில் கத்திரி வெயிலின் தாக்கத்தை கோடை மழை விரட்டியடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை மழை

கோடையின் உச்சம் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வருகிற 29-ந்தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

இந்தநிலையில் கத்திரி வெயில் தொடங்கிய அன்று முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கத்தை விரட்டி அடிக்கும் வகையில் தினமும் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் ஓரளவு காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணத்தொடங்கியது.

கொட்டித்தீர்த்த மழை

நேற்று மாலை 3.45 மணி அளவில் திருச்சியில் திடீரென மழை பெய்யத்தொடங்கி சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்தது. திருச்சி ஜங்ஷன், சத்திரம் பகுதி, பொன்மலை, விமானநிலையம், கே.கே.நகர், கருமண்டபம், தில்லைநகர், எடமலைப்பட்டி புதூர், பாலக்கரை, உறையூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் மழை பெய்தது.

இதன்காரணமாக மாநகரமே குளிர்ந்தது. அதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம் சுமார் அரைமணி நேரத்தக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் மாநகரின் பல இடங்களில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சத்திரம் பஸ்நிலையம், சிந்தாமணி, தில்லைநகர் பகுதிகளில் சாலையோரம் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்களும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்