கோடை விழா, மலர் கண்காட்சியுடன் கோலாகலமாக தொடங்கியது

கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சியுடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. விழாவில் ‘ேபாக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மாற்றுச்சாலை’ அமைக்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.

Update: 2023-05-26 19:00 GMT

கோடை விழா

'மலைகளின் இளவரசி' கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க உள்ளூர் சுற்றுலா பயணிகள் தவிர, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா, மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடை விழா, 60-வது மலர் கண்காட்சியுடன் பிரையண்ட் பூங்காவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. கோடை விழாவில் முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது.

இதற்காக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காரனேசன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி, வாத்து உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட காட்டெருமை, பூக்களால் வடிவமைக்கப்பட்ட அரங்குகள் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

கோடை விழா ெதாடக்க நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மலர் கண்காட்சி

விழாவில் மலர் கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும், மலர்களால் உருவாக்கப்பட்ட உருவங்களையும் பார்த்து ரசித்தனர். அதனைத் தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் கோடை விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் வேலுச்சாமி, ஜோதிமணி, எம்.எல்.ஏ. இ.ெப.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி வரவேற்றார்.

மாற்றுச்சாலை அமைக்கப்படும்

விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை சந்தைப்படுத்த எளிமையாகி உள்ளது. அத்துடன் மேல்மலை பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதி மூன்றே நாட்களில் வழங்கப்பட்டது. மலைகளின் ராணியாக ஊட்டி திகழ்ந்தாலும், அதற்கு வயதாகி விட்டது. கொடைக்கானல் என்றும் இளவரசியாக திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் இங்கு நிலவும் பருவ நிலையும், இயற்கை வளமும் தான். சொர்க்க பூமியான கொடைக்கானலுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு கூட செல்லாமல் இங்கு வருகை புரிவது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு கூட்டுறவுத் துறை சார்பில் ஆராய்ச்சி படிப்புக்காக சுமார் 108 கோடி ரூபாய் செலவில் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. அது விரைவில் திறக்கப்படும். கொடைக்கானல் பகுதிக்கு நாளுக்கு, நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதனை தீர்ப்பதற்காக கொடைக்கானல் நகருக்கு மாற்றுச்சாலை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரோஜா கண்காட்சி

விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு காலகட்டங்களில் அதிக அளவு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ளது போல் கொடைக்கானல் நகரிலும் அடுத்த ஆண்டு முதல் புகழ்பெற்ற ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படும். கொடைக்கானல் பகுதியில் விளையும் மலைப்பூண்டுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளது. எனவே இதன் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பூண்டை பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாச்சலூர் பகுதியில் ஸ்ட்ராபெரி சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பதிக்கு பஸ் வசதி

விழாவில் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை பகுதியில் தமிழக எல்லையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் கேரள மாநில எல்லை உள்ளது. இந்த பகுதியில் சாலை வசதி அமைத்தால் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும். பழனி நகரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இதற்காக புதிய வால்வோ பஸ்கள் வாங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரோப் கார் திட்டம்

விழாவில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், வேளாண்மை துறையின் மூலம் ஒட்டன்சத்திரத்தில் குளிர்பதன கிட்டங்கி ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் திறக்கப்படும். பழனி-கொடைக்கானல் இடையே ரோப் கார் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிக்கு கடந்த ஆண்டில் சுமார் 56 லட்சத்து 775 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி, காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திட்ட இயக்குனர் திலகவதி.

கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், தி.மு.க. நகர செயலாளர் முகமது இப்ராகிம், ஒன்றிய செயலாளர்கள் கருமலைப்பாண்டி, ராஜதுரை, ஒன்றிய குழு தலைவர் சுவேதாராணி கணேசன், துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன், வடகவுஞ்சி ஊராட்சித் தலைவர் தோழி ஆனந்தன், துணைத் தலைவர் சிவபாலன், அரசு வக்கீல்கள் முனியாண்டி, சக்திவேல், ஆசிர்மோகன், நகராட்சி வக்கீல் சரவணகுமார், கட்டிட கட்டுமானோர் மைய தலைவர் கிருஷ்ணகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் தேவி செல்வராஜ், இருதயராஜா ஆண்டவர் அப்பாஸ், கலாவதி தங்கராஜ், ஆர்.டி.ஓ. ராஜா, நகராட்சி ஆணையர் சத்தியநாதன், பொறியாளர் முத்துக்குமார், தோட்டக்கலைத் துறை அலுவலர் சிவபாலன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தர் கலா சேதுபதி, பதிவாளர் ஷீலா மற்றும் நகராட்சி, ஒன்றிய கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுலா அலுவலர் சுதா நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்