ஸ்டூடியோ பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு
நாமக்கல்லில் ஸ்டூடியோ ஒன்றில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு
நாமக்கல் - மோகனூர் சாலை கொண்டிசெட்டிப்பட்டியில் ஸ்டூடியோ நடத்தி வருபவர் தேவலாசர். இவர் கடந்த 28-ந் தேதி ஸ்டூடியோவை பூட்டிவிட்டு, திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு புகைப்படம் எடுக்க சென்று உள்ளார். பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் ஸ்டூடியோவிற்கு வந்து உள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்தன.
உள்ளே சென்று பார்த்தபோது 2 கம்ப்யூட்டர்கள், கீபோர்டு, நவீன கேமரா ஒன்று, பேட்டரி, யு.பி.எஸ். உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தேவலாசர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரும்புகடை
இதேபோல் கடந்த 27-ந் தேதி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இரும்பு கடை ஒன்றில், இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல் கல்லாவில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது.
நாமக்கல் நகரில் மீண்டும் திருட்டு சம்பவம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.